தெலங்கான முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி முன்னாள் நக்சலைட்டுகளுடனும் தொடர்பு வைத்திருப்பதாக தெலங்கானா பாஜக தலைவர்களுல் ஒருவரானா பண்டி சஞ்சய் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.சுதர்சன் ரெட்டியை ஆதரித்து ரேவந்த் ரெட்டி பேசிய பேச்சுக்கள் தெலங்கான அரசியலில் விவாதத்தை கிளப்பியுள்ளது. சுதர்ஷன ரெட்டியை ஆதரித்து பேசிய அவர், தெலுங்கு பேசும் அனைத்து எம்.பி.க்களும் நீதிபதி ரெட்டியை ஆதரிக்க வேண்டும் என்றும் அவரை தெலுங்கு மகன் என்றும் ரேவந்த் ரெட்டி குறிப்பிட்டார்.
மேலும், நக்ஸலிசம் என்பது சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டுமே என்றும், அதனை வலுக்கட்டாயமாக தீர்க்க முடியாது என்றும் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்து இருந்தார்.
தவிர, நக்ஸலிசம் என்பது சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளிலிருந்து உருவாகும் ஒரு “சித்தாந்தம்” என்று கூறிய ரேவந்த் ரெட்டி, காங்கிரஸ் அரசாங்கம் நக்சலிசத்தை வெறும் சட்ட அமலாக்கக் கண்ணோட்டத்தில் பார்க்காமல், ஒரு சமூகக் கண்ணோட்டத்தில் பார்க்கிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், தெலங்கானா பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பண்டி சஞ்சய் குமார், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை காட்டமாக விமர்சித்துள்ளார். நக்சலைட்டுகளை ஆதரத்து பேசியதன் மூலம், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் உட்பட நக்சலைட் வன்முறையால் இழந்த ஆயிரக்கணக்கான உயிர்களை அவர் அவமதித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தள பதிவில், “மாநில உள்துறை அமைச்சராக ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா காவல்துறையினரின் தியாகங்களுக்கு ஏதேனும் மரியாதை செலுத்துகிறாரா? காங்கிரஸ் அரசுக்கு முன்னாள் நக்சலைட்டுகளுடனும், நக்சல் அனுதாபங்களுடனும் தொடர்பு இருக்கிறது. இது தெலுங்கானா இளைஞர்களை மீண்டும் தீவிரவாதத்தில் தள்ளுவதற்கான சதி” என்று சஞ்சய் குமார் குற்றம் சாட்டினார்.
“நக்சல் இல்லாத இந்தியா”வுக்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை சஞ்சய் வலியுறுத்தினார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மார்ச் 2026க்குள் இடதுசாரி தீவிரவாதத்தை ஒழிக்கும் என்றும், அரசியலமைப்பும் ஜனநாயகமும் வன்முறை தீவிரவாதத்திற்கு அப்பாற்பட்டவை என்றும் அவர் கூறினார்.