பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட மூன்று பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பீகார் மாநிலத்தில் நடப்பாண்டு அக்டோபர் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாக கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் உளவுத்துறை அதிகாரிகள் பீகார் காவல்துறைக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளனர். அதில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் நேபாளம் வழியாக பீஹாருக்குள் ஊடுருவி உள்ளதாக கூறியுள்ளனர்.
பாகிஸ்தானின் ராவல்பிண்டி , உமார்கோட், பஹாவல்பூரை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் கடந்த வாரம் பீஹாருக்குள் நுழைந்துள்ளதாகவும், ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் நேபாளத் தலைநகர் காத்மாண்டு வழியாக பீஹாருக்குள் நுழைந்துள்ளதாக எச்சரிக்கை கொடுத்துள்ளனர். இந்த எச்சரிக்கையை அடுத்து பீஹார் காவல்துறை உச்சகட்ட அவசர நிலையை அந்த மாநிலத்தில் பிறப்பித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் ஜம்மு & காஷ்மீரின் பஹல்ஹாமில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் இந்திய பாதுகாப்பு படையினர், பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாதிகளினுடைய முகாம்கள் மற்றும் தளங்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்த இருந்தனர். இதில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தின் பதற்றம் தணிவதற்குள்ளாக பாகிஸ்தானை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் உளவுத்துறை வழங்கியுள்ள தகவலின் படி பீஹார் மாநிலத்தில் அம்மாநில காவல்துறை தீவிரமான தேர்தல் மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஒருபுறம் வாக்காளர் உரிமை பேரணி என்ற பெயரில் ராகுல் காந்தி பீஹார் முழுவதும் பேரணிகளை மேற்கொண்டு வருகிறார். மறுபுறம் பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரின் கட்சியும் பேரணிகளை நடத்தி வருகிறது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, ஆட்சியை தக்க வைக்க பொதுக்கூட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் தீவிரவாத ஊடுருவல் எச்சரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.