முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மட்டுமின்றி நேற்று அவருடன் கூட்டத்தில் இருந்த ஆதரவு நிர்வாகிகள் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
நேற்று ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசினார். பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி தவிர்த்ததாகவும், அதிமுகவில் சசிகலா, தினகரன் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்றும் பேசினார். செங்கோட்டையன் பேசியது தமிழக அரசியலில் அதிருப்தியையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.
மேலும், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியை எடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் அவகாசம் கொடுப்பதாக செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் செங்கோட்டையனை அதிமுகவின் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். செங்கோட்டையன் மட்டுமில்லாமல், அவரது ஆதரவாளர்களின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், நம்பியூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் தம்பி (எ) K.A. சுப்பிரமணியன், நம்பியூர் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி (எ) சென்னை மணி, கோபிசெட்டிப்பாளையம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் N.D. குறிஞ்சிநாதன், அந்தியூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் தேவராஜ், அத்தாணி பேரூராட்சிக் கழகச் செயலாளர் ரமேஷ், துணைச் செயலாளர் வேலு (எ) தா. மருதமுத்து, ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் மோகன்குமார் ஆகியோர் தங்களது பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.