தேர்தலுக்கு முன்பாக எல்லா பிரச்சனைகளும் நிறைவடைந்து விடும் என்றும், 9 மாதத்திற்குள் நாங்கள் பலம் பொருந்தியவர்களாக இருப்போம் எனவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் மருத்துவமனைகளுக்கான அங்கீகாரம் அனுமதி பெறுதல், பழைய மருத்துவமனைகளுக்கான உரிமத்தை புதுப்பித்தல் உள்ளிட்டவைகளுக்கு ஒற்றைச் சாளர முறையில் இணையதள பக்கத்தை தனியார் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
அதனை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அந்த இணையதளத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஹெச்.பி.ஹண்டே கலந்து கொண்டுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிக மிக மோசமான நிலையில் உள்ளது. பாமகவை சார்ந்த ஸ்டாலின் அவரது அலுவலகத்திற்கு உள்ளேயே குண்டு வைத்து தாக்கப்பட்டுள்ளார். ஏர்போர்ட் மூர்த்தி டிஜிபி அலுவலகத்திற்கு வெளியேயே தாக்கப்பட்டுள்ளார். செருப்பால் அடிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் தமிழ்நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை. இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். காவல்துறையை கையில் வைத்துள்ள ஸ்டாலின் கொஞ்சம் கூட கவலை இல்லாமல் இருப்பது மனதிற்கு வேதனையாக உள்ளது.
ஜிஎஸ்டி வரி குறைப்பு மத்திய அரசு செய்துள்ளது. ஆனால் முதலமைச்சராக இருந்துகொண்டு ஒரு பாராட்டு, நன்றி கூட ஸ்டாலின் தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
வெளிநாட்டில் பெரியார் படத்தை திறந்து வைத்து, சமூக நீதி குறித்து பேசுகிறார். ஆனால், தமிழ்நாட்டில் சமூக நீதி புதைக்கப்பட்டுள்ளது. ஆணவக் கொலைகள் நடக்கிறது. பட்டியலின சகோதரரை காலில் விழ வைப்பதும், மலம் கலந்த குடிநீரை குடிக்க வைப்பது தான் பெரியார் பாதையில் நடப்பதா?
டிடிவி தினகரன் கருத்து குறித்து நான் கருத்து சொல்ல தகுதியானவள் இல்லை. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியை மூழ்கும் கப்பல் என செல்வ பெருந்தகை பேசியுள்ளார். அவர்தான் மூழ்கப் போகிறார். 2026 தேர்தலில் அவர் காங்கிரஸ் கட்சி தலைவராக இருப்பாரா என்று கூட தெரியவில்லை. அவர் எங்களைப் பார்த்து மூழ்கும் கப்பல் என பேசியுள்ளார்.
எல்லா பிரச்சனையும் தேர்தலுக்கு முன்பாக நிறைவடைந்து விடும். ஒன்பது மாதத்திற்குள் எல்லாம் சரியாகிவிடும். ஆளும் திமுகவை வீழ்த்துவதில் அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளார்கள். 2026 தேர்தலில் நாங்கள் பலம் பொருந்தியவர்களாக இருப்போம்” என தெரிவித்தார்.