ஹரித்துவார் செல்வதாக கூறிவிட்டு அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையனால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 5ம் தேதி மனம் திறந்து பேசுவதாக கூறி செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை கூறினார். இதனால் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று காலை திடீரென டெல்லி புறப்பட்டு சென்ற செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தான் ஹரித்துவார் செல்வதாகவும், அங்கு ராமரை தரிசிக்க இருப்பதாகவும் கூறினார்.
இந்த நிலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் கோவை திரும்பிய செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு மீண்டும் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், நேற்றைய தினம் ஹரித்துவார் செல்வதாக கூறி டெல்லி சென்ற நிலையில் அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அனுமதி கிடைத்ததாகவும், அதன் பேரில் அங்கு சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து இன்றைய அரசியல் சூழல் பற்றிய கருத்துக்களை பரிமாறி கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், எல்லோரும் ஒன்றிணை வேண்டும் என்ற நோக்கத்துடன், இயக்கம் வலிமை பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் கருத்துக்களை எடுத்துரைத்ததாகவும் அந்த கருத்துக்களின் அடிப்படையில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டு பேசினார். மேலும் மக்கள் பணி அனைத்தும் செய்வதற்கும் இயக்கம் வலிமை பெறுவதற்கு அனைவரின் ஒத்துழைப்போடு பணிகளை தொடர்ந்து ஆற்றுவேன் என்று கூறியுள்ளார்.