விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கணிசமான வாக்கு வங்கி உள்ளது என்றும் விஜய் அரசியலில் மிகப்பெரிய உந்து சக்தியாக இருப்பார் என்றும் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, கட்சி நிர்வாகியின் திருமண விழாவிற்காக திண்டுக்கல் வருகை புரிந்திருந்தார். அப்போது திண்டுக்கல், கட்சி நிர்வாகிகளால் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, “அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது கட்சியின் முடிவு. இது குறித்து செங்கோட்டையனிடம் தான் கேட்க வேண்டும். உட்கட்சி விவகாரத்தில் கருத்து சொல்ல விரும்பவில்லை. அது ஆரோக்கியமாக இருக்காது.
அதிமுக மிகப்பெரிய இயக்கம். முக்கிய நிர்வாகிகளை நீக்கம் செய்வது குறித்து, கட்சிக்குள் பேசிக் கொள்வார்கள். செங்கோட்டையன் தரப்பு நாயம் குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.
அதிமுகவை பாஜக பின்னால் இருந்து இயக்குகிறது என்று குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால் இதில் பாஜக இருக்கிறதா? இல்லையா? என்று தெரியவில்லை. ஆனால் கடந்த காலங்களில் தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் கூட்டணியில் பிளவுகள் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
அந்த சந்தேகத்தின் அடிப்படையில், அதனால் அதிமுக பிரச்சனையில் பாஜக இருக்குமா? என்று சந்தேகம் வருகிறது. சில மாநிலங்களில் பாஜக இது போன்று முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். மற்ற கட்சிகளை பலவீனப்படுத்துவதை தொடர்ந்து பாஜக செய்து வருகிறது. இது தவறான விஷயம், ஜனநாயகத்திற்கு புறம்பானது.
விஜய் வருகை குறித்து பலமுறை கருத்து தெரிவித்துள்ளேன். தமிழ்நாட்டில் விஜய்க்கு இலட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். இதில், மறுப்பதற்கு ஏதும் கிடையாது. விஜய்க்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. அரசியலில் மிகப்பெரிய உந்து சக்தியாக இருப்பார்.
ஆனால், எம்.ஜி.ஆர் போல் முதன்மையான இடத்தை அடைவாரா என்பது, அவரது செயல்பாடுகளை பொறுத்தே அமையும். ஆனால் அடுத்த வருடமே எம்ஜிஆர் போல் வருவார் என்பது வாய்ப்பு கிடையாது” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ‘எந்த நோக்கத்திற்காக திமுக கூட்டணியில் இணைந்தோமோ, அந்த நோக்கத்திற்காக தொடர்ந்து இருந்து வருகிறோம். திமுகவில் நீடிக்கிறோம்; தொடர்ந்து நீடிக்க விரும்புகிறோம். திமுக கூட்டணியில் தேமுதிக சேர்ந்தால் கூட்டணி பலமடையும். வெற்றிகள் எளிதாக கிடைக்கும்’ என்றார்.