அதிமுகவில் இருந்து வெளியேறிவர்கள் மற்றும் வெளியேற்றப்பட்டவர்களை ஒருங்கிணைக்க செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில் அவசர ஆலோசனை நடைபெறவுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை (05-09-25_ ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ‘கட்சியில் இருந்து வெளியேறிவர்கள் அல்லது வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் காலக்கெடு விதிக்கிறோம்.
அதற்குள் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த கருத்துள்ள ஒத்த மனநிலை கொண்டவர்களை ஒருங்கிணைத்து இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். அதாவது எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைக்கவில்லை என்றால் நாங்கள் ஒருங்கிணைப்போம்” என்று காட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவரும் அஇஅதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை வழி மறித்த அதிமுக தொண்டர்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டனர். தவிர, பிளவுபட்ட அதிமுகவை ஓர் அணியில் திரட்டி வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் அதிமுகவை வெற்றி பாதைக்கு திரும்பச் செய்து ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று திண்டுக்கல்லில் தங்கியிருக்கும் அதிமுக பொதுச்செயலாளரை சந்திக்க அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சென்றுள்ளனர். இந்த சந்திப்பில், செங்கோட்டையன் பேசியது தொடர்பாக அவசர ஆலோசனை நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.