பிழைப்புக்காக அரசியலுக்கு வரவில்லை என நடிகர் விஜய் குறிப்பிட்ட வார்த்தைக்கு பொருத்தமானவர் நடிகர் கமல்ஹாசன் தான் என பிரபல நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கோவை துடியலூர் பகுதியில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஞ்சித் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய நடிகர் ரஞ்சித், “தற்போது சொந்த நாட்டிலேயே பொட்டு வைப்பதற்கு பிரச்சனை, சாமி கும்பிடுவதற்கு பிரச்சனை என்ற நிலை இருக்கிறது. அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. சாமி கும்பிடுவதால் சங்கி என்றும் உங்களுடன் ஒன்றி இருப்பதால் சாதி வெறியன் என்றும் என்னை சிலர் விமர்சிக்கின்றனர்.
இந்திய கலாச்சாரப்படி இருப்பதால் என்னை சங்கி என்று விமர்சித்தால் நான் ஒரு சங்கிதான். இன்று சில கட்சிகளில் ஐந்து கொலை செய்தால் தான் மாவட்ட செயலாளர், பத்து வழக்கு வாங்கினால் தான் மாவட்ட செயலாளர் என்று நிலை இருக்கிறது.
ஆனால் இந்து முன்னணி அமைப்பு அன்பிற்காக இயங்கக்கூடிய ஒரு அமைப்பு. இந்து முன்னணியில் உழைக்கக்கூடிய யாரும் மந்திரி பதவிக்காக உழைப்பதில்லை. டாஸ்மாக் ஏலம் எடுப்பதற்காகவும் அரசு ஒப்பந்தம் எடுப்பதற்காகவும் பணியாற்றுவதில்லை.
மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், ‘பிழைப்பு தேடி அரசியலுக்கு வந்தவன் நான் இல்லை’ என்று குறிப்பிட்டார். அப்படி என்றால் எம்ஜிஆரை சொன்னாரா அல்லது ஜெயலலிதாவை சொன்னாரா அல்லது விஜயகாந்தை சொன்னாரா? ஒருவேளை நேரடியாக சொல்வதற்கு பதிலாக மறைமுகமாக நடிகர் கமலஹாசனை குறிப்பிட்டாரா? பிழைப்புக்காக அரசியலுக்கு வந்தவர் என்ற வார்த்தைக்கு பொருத்தமானவர் நடிகர் கமல்ஹாசன் தான்.
மதுரை மாநாட்டில் சொடக்கு போட்டு பிரதமரை குறிப்பிட்டு பேசிய நடிகர் விஜய், 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி கோவையில் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக பூனை குட்டியை போன்று கையை கட்டி அமர்ந்திருந்தார்.
இன்று இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் விளைவித்தார் பிரதமர் மோடி என்று சுட்டிக்காட்டும் விஜய், அன்று பிரதமரை சந்தித்தது கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகவா? மீனவர் பிரச்சினை குறித்து பேசவா? கல்வியை சமத்துவமாக வேண்டும் என்று பேசுவதற்காகவா? அல்லது கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவா?
தலைவா என்ற தனது படத்தை ரிலீஸ் செய்வதற்காகவே காத்திருந்தார். நடிகர் விஜய் அதையெல்லாம் மறந்துவிட்டார் போல. அவருக்கு மூளையில் ஏதோ பிரச்சனை இருக்கிறது. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பது போல். முதல்வரை அங்கிள் என பேசுகிறார்; பிரதமரை மிஸ்டர் என்று குறிப்பிடுகிறார். இதுதான் அரசியல் நாகரிகமா? இன்று பிரதமர் மோடியை வியந்து பார்க்கிறது” என்று குறிப்பிட்டார்.