Thursday, September 11, 2025
Homeஅரசியல்முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகை

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகை

கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் போது ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய வழக்கில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 7 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக ஆஜராகினர். மறு விசாரணை வரும் அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெறும் என நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார். 150 பக்க குற்றப்பத்திரிகையின் நகல் முன்னாள் அமைச்சர் கையில் வழங்கப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டதாக சாத்தூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ரவீந்திரன் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதே நாளில் விஜய் நல்லதம்பி அளித்த புகாரில் சத்துணவு, கூட்டுறவு, ஆவின், ஊராட்சி செயலர் உள்ளிட்ட வேலைகளுக்கு பலரிடம் பணம் பெற்று, ராஜேந்திரபாலாஜியிடம் ரூ.3 கோடி கொடுத்ததாக அளித்த புகாரில் ராஜேந்திரபாலாஜி உட்பட 7 பேர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தலைமறைவான முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை 18 நாட்களுக்கு பின் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி கர்நாடகா மாநிலத்தில் வைத்து தமிழக போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2023 ஜனவரி மாதம் ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் முன்னாள் அமைச்சர் மீதான மேல் விசாரணைக்கு ஆளுநர் அனுமதி வழங்காததால் நிலுவையில் இருந்து வந்தது.

கடந்த 2021-ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக் கோரி ரவீந்திரன் சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதில் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு தடைவிதிக்கக்கோரி ராஜேந்திர பாலாஜி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

இதனைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ஸ்ரீவில்லிபுத்தூரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டு வரும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.2 -ல் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது இரு வேறு வழக்குகளிலும் ஆன்லைன் மூலம் 16.04.25 அன்று குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து வழக்கனது மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று மூன்றாவது முறையாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி ஜெயக்குமார் முன்பு ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த விசாரணை வரும் அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெறும் என உத்தரவிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments