த.வெ.க தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்து கூற வேண்டிய அவசியம் இல்லை என்றும், புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் வருவதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், ஒரு வார கால பயணமாக ஜெர்மனி இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொள்வதாகவும், செப். 8ஆம் தேதி சென்னை திரும்புவதாக கூறினார்.
மேலும் கூறிய அவர், “2021ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 10 லட்சத்து 62 ஆயிரத்து 752 கோடி மதிப்பிலான முதலீடுகளை தமிழகம் பெற்றுள்ளது. இதுவரை 922 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திப்பட்டுள்ளது. 32 லட்சத்து 31 ஆயிரத்து 32 பேருக்கு இதன் மூலம் வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்பெயின், சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்க பயணத்தின் போது 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ஸ்பெயின் பயணத்தின் போது 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ஜப்பான் பயணத்தின் போது 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ஐக்கிய அரபு அமீரகம் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், சிங்கப்பூர் பயணத்தின் போது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் என மொத்தம் வெளிநாடு பயணங்களின் போது 36 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இதன் மூலம் 30 ஆயிரத்து 37 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, 18,498 கோடி மதிப்பில் தமிழகம் முதலீடுகளை ஈர்த்துள்ளது. 36 ஒப்பந்தங்களில் 23 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வர தொடங்கியுள்ளது. சில நிறுவனங்கள் தங்களது உற்பத்தியும் தொடங்கிவிட்டது.
வெளிநாட்டு பயணத்தை பொறுத்தவரை இ.பி.எஸ் விமர்சித்து வருகிறார். ஆனால் நான் கையெழுத்து போட்ட அனைத்தும் நடைமுறைக்கு வந்துள்ளது. புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் வருகின்றனர்” என்றார்.
தவிர, எல்லா கருத்து கணிப்புகளையும் மிஞ்சி திமுக வெற்றி இருக்கும் என கூறிய அவர், விஜய் அரசியல் வருகை குறித்து கருத்து கூற வேண்டிய அவசியம் இல்லை என்றும், பேச்சை விட்டு செயலில் அனைத்தும் இருக்கும் எனவும் கூறினார்.