செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் டிடிவி தினகரன், சசிகலா என பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் கூறிய நிலையில், அவரை கட்சி பொறுப்பில் நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனை தொடர்ந்து வரும் 9ம் தேதி மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் பேச உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியவர்களை ஒன்று சேர்ப்பேன் என தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்தது குறித்து ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார். அதில், நைனார் நாகேந்திரனின் நல்ல மனதிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்கால முடிவை பத்திரிக்கையாளர்களை சந்தித்து தெரிவித்து செல்வேன்.
செங்கோட்டையன் ஒருங்கிணைப்பு குறித்து கேட்டபோது அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், செங்கோட்டையனின் முயற்சிக்கு முழு ஆதரவு அளிக்கிறோம். அவர் எடுக்கும் அனைத்து முடிவுக்கும் ஆதரவு அளிப்பதுடன், செங்கோட்டையனை உறுதியாக சந்தித்து பேசுவேன் என தெரிவித்தார்.