தவெக தலைவர் விஜய் திருச்சி மரக்கடையில் பேசுவதற்கு காவல்துறை 23 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளனர்.
மதுரை மாநாட்டை முடித்து கொண்ட விஜய் திருச்சியில மக்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். இதற்காக 2 முறை அனுமதி கேட்டு அது மறுத்த நிலையில் மீண்டும், முறையிட்டுள்ளனர். இந்த நிலையில் திருச்சி மரக்கடையில் விஜய் பேச 23 நிபந்தனைகளுடன் மாநகர காவல் துணை ஆணையர் சிபின் பரிசீலனை செய்துள்ளார். தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகி கரிகாலன் ஆகியோர் தவெக தலைவர் விஜய் பேசுவதற்கான நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாக எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்தவு நிலையில் அவர்களுக்கு கடிதம் காவல்துறை துணை ஆணையர் சிபின் அனுமதி கடிதத்தை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
திருச்சி மரக்கடையில் விஜய் 30 நிமிடம் மட்டுமே பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் காலை 10:30 மணியில் இருந்து பதினோரு மணி வரை மட்டுமே அவர் அந்த இடத்தில் விஜய் பேச முடியும் என்றும், காலை 9:30 மணி அளவில் மரக்கடை பகுதிக்கு தொண்டர்களை வரவழைத்து வைத்திருக்க வேண்டும் என்றும், ரோடு ஷோ நடத்தக்கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், விஜய் வரும்பொழுது அவருடைய வாகனத்துக்கு முன்பும், பின்பும் 5 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும், வேறு வாகனங்கள் வந்தால் அனுமதி மறுக்கப்படும் என்றும், மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் என அனைத்தும் தமிழக வெற்றிக்கழகத்தினர் செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
குழந்தைகள், கர்ப்பிணி, பெண்கள், மாற்றுத்திறனாளிகளை அழைத்து வரக்கூடாது என்று அறிவுறுத்தியதுடன், பொதுமக்கள் யாருக்கும் போக்குவரத்திற்கு இடையூறு செய்யக்கூடாது, கூம்பு வடிவ ஸ்பீக்கர்களை வைக்கக்கூடாது, தாவேகா தொண்டர்கள் மிக நீளமான குச்சி கொடி எடுத்து வரக்கூடாது, பள்ளிக்கு செல்பவர்கள், விமான நிலையம் செல்பவர்கள், மருத்துவமனை செல்பவர்களுக்கு வழி விட வேண்டும், ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது உள்ளிட்ட 23 நிபந்தனைகளை திருச்சி மாநகர காவல் துறையினர் விதித்துள்ளனர். இந்த உறுதி மொழியை எடுத்து எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்தவுடன் அனுமதி கடிதத்தை மாநகர காவல் துணை ஆணையர் சிபின் வழங்குவார் என்றும் கூறப்பட்டுள்ளது.