சென்னை அதிமுக அலுவலகம் அமைந்துள்ள ஔவை சண்முகம் சாலை முழுவதும் சசிகலாவிற்கு ஆதரவாகவும், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அல்லது நீக்கி வைக்கப்பட்டுள்ள அனைவரையும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஒருங்கிணைந்த அதிமுக உருவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த ஐந்தாம் தேதி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருந்தார். மேலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாட்களுக்கு கெடு விதித்து இருந்தார்.
இது அதிமுகவில் புயலை கிளப்பிய நிலையில் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து செங்கோட்டையன் உட்பட அவரது ஆதரவாளர்கள் விடுவிக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பை வெளியிட்டார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் தோழி சசிகலா செங்கோட்டையன் மீதான நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமானது அறிக்கை வெளியிட்டார்.
இந்த நிலையில் சசிகலாவின் ஆதரவாளர்கள் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ஔவை சண்முகம் சாலையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர் அதில், ‘ஒன்றிணைவோம், வென்று காட்டுவோம்’ என எடப்பாடி பழனிச்சாமி கூவத்தூரில் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது நடைபெற்ற நிகழ்வுகளை சுட்டிக்காட்டி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.