அதிமுக மீது மரியாதை உண்டு. அதிமுகவே ஒரு திராவிட இயக்கம். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் இந்த கருத்துகளை முன் வைக்கிறோம் என்று விடுதலை சிறுத்கைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆர்எஸ்எஸ் பாசறையில் வாழ்ந்தவர். அவர் அப்படி கருத்து கூறுவதில் எந்த வியப்பும் இல்லை. அதிமுக பெரியார் பாசறையில் வளர்ந்த ஒரு அரசியல் இயக்கம். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் ஆர்எஸ்எஸ், பிஜேபி போன்ற சக்திகள் இங்கே வளர்வதற்கு இடம் தரவில்லை என்கிற கருத்து இங்கே வலுவாக உண்டு.
ஆனால், அவர்களை பின்பற்றக்கூடிய இன்றைய தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள், ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளுக்கு ரத்தினக்கம்பளம் விரித்து வரவேற்பது அளிப்பது அதிர்ச்சிக்குரியது.
அந்த துணிச்சலில்தான் ஆர்எஸ்எஸ் வழி நடத்தினால் என்ன தவறு என்று கேள்வி எழுப்பக்கூடிய நிலையும் உருவாகி இருக்கிறது. இது அதிமுகவின் நிலை எவ்வளவு பரிதாபமாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. விஜய்க்கும் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள் என்றால், விஜயின் பேச்சிலும், செயலிலும் அந்த சாயம் இருக்கிறது என்று நம்புகின்றனர். அவர் எச்சரிக்கையாக இருப்பார் என்று நம்புகிறேன்.
ஆர்எஸ்எஸ் இங்கு வளர்வதற்கு அதிமுகவோ அல்லது வேறு கட்சியோ வாய்ப்பு அளிக்கும் என்றால் அது தமிழ்நாட்டு மக்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகமாக அமைந்துவிடும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கும் வகையிலே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
அதிமுக மீது மரியாதை உண்டு. அதிமுகவே ஒரு திராவிட இயக்கம். ஒரு சமூகநீதி இயக்கம். பெரியார் இயக்கம். அண்ணா இயக்கம் என்று நம்புகிறோம். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் இந்த கருத்துகளை முன் வைக்கிறோம். இல்லை என்றால் இதுகுறித்து பேசப்போவதில்லை. அதிமுக இதைத் தெளிவுபடுத்திவிட்டால், அடுத்த நொடியே அவர்களைப் பற்றி பேசமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.