பாஜக தொண்டர்கள் கட்சியின் அடையாள அட்டை மற்றும் துண்டு இருந்தால் இந்தியாவின் எந்த மூலையிலும் பிழைத்துகொள்ளலாம் என்றும், ஒருசில கட்சிகள் கோரிமேடு பகுதியை கூட தாண்ட முடியாது என பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “காவி கொடி இல்லாத மாநிலமே இல்லை; உலகில் எந்த மூலைக்கு சென்று பிரதமர் மோடியின் பெயரை சொன்னால்போதும், அங்கிருப்பவர்கள் நம்மை வரவேற்பார்கள்.
பாஜக தொண்டர்கள் பாரதிய ஜனதா கட்சியின் அடையாள அட்டை மற்றும் துண்டு இருந்தால் போதும் இந்தியாவின் எந்த மூலையிலும் பிழைத்துகொள்ளலாம். ஒருசில கட்சிகள் புதுச்சேரியின் எல்லையான கோரிமேடு பகுதியை கூட தாண்ட முடியாது” என கூட்டணி கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விமர்சித்து பேசினார்.
கடந்த 2012ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ரங்கசாமி, என்.ஆர்.காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கினார். தற்போது புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் தலைமை தாங்கி வருகிறது.
இந்நிலையில், மாநில கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை, புதுச்சேரி எல்லையை தாண்ட முடியாது என பாஜக மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் விமர்சித்து பேசியுள்ளது கூட்டணி கட்சியினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.