Thursday, September 11, 2025
Homeஅரசியல்தவெக கூட்டணியா.. மக்களை குழப்புகின்றனர்… - கொந்தளித்த புஸ்ஸி ஆனந்த்

தவெக கூட்டணியா.. மக்களை குழப்புகின்றனர்… – கொந்தளித்த புஸ்ஸி ஆனந்த்

புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று உண்மைக்கு புறம்பான தகவல்களைச் செய்தியாக வெளியிட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வர இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. ஆளுங்கட்சி சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், வெளிநாட்டு முதலீடுகள் என பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. பிரதான எதிர்கட்சியான அதிமுக சார்பில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

புதிதாக கட்சி தொடங்கி உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், வருகிற 17-ந் தேதி முதல் மக்களை நேரடியாக சந்திக்க சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்து உள்ளார். தேர்தல் கூட்டணி குறித்து, இதுவரை எந்த இறுதியான முடிவும் எட்டப்படாத நிலையில், பல்வேறு யூகங்கள் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

தவெக தலைவர் விஜய், கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று கட்சி மாநாட்டில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் தவெக, கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக, வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டது. இதற்கு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது.

இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு, புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று வார இதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைச் செய்தியாக வெளியிட்டுள்ளது.

இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது. இது போன்ற வதந்திகளை பரப்பும் ஊடகத்தின் பொய்ச் செய்திகளை மக்கள் புறக்கணித்து விடுவார்கள். கூட்டணி தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகம், புதுச்சேரி மாநிலத்தில் யாருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர்களின் விவரங்களைக் கழகத் தலைவர் விஜய் விரைவில் அறிவிப்பார். தேர்தல் நிலைப்பாடு குறித்தும் கழகத் தலைவர் விஜய்யின் முடிவே இறுதியானது. எனவே, மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக யூகத்தின் அடிப்படையில் உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments