அதிமுக என்பது உடைந்த கண்ணாடி அதை ஒட்ட வைக்கும் எந்த முயற்சியும் எடுபடாது என்றும் அதிமுகவில் கொள்கை கோட்பாடு இல்லை என்றும் சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் மாநில சமச்சீர் கல்வி திட்டத்திற்கு சம வாய்ப்பு வழங்க வேண்டும், சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் கீழ் கல்வி என்ற ஒற்றை கல்வி முறையை திணிக்காதே, தாய்வழி கல்விக்கு முன்னுரிமை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரி கல்வித்துறை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் கட்சியினர், இந்த ஆர்ப்பாட்டம் சுப்பையா சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று கல்வித்துறையை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், “அதிமுக என்பது ஒரு உடைந்த கண்ணாடி. அந்த கண்ணாடியை ஒட்டவைக்க எடுக்கும் எந்த முயற்சியும் எடுபடாது. அவர்களுக்குள் கொள்கை, கோட்பாடுகள் என்று ஏதுமில்லை.
கொள்ளையடிக்கிற பணத்தை பாதுகாப்பது, பங்குபோட்டு கொள்வதில் தான் பிரிவு ஏற்பட்டுள்ளது. 10 அல்லது 15 நாளில் பிரிந்தவர்களை செங்கோட்டையன் எப்படி ஒருங்கிணைப்பார். தன்னை நிலைநிறுத்தி கொள்வதற்காக சொல்லும் வாய்ப்பு தான்.
ஆனால் அதிமுக ஒன்றுபடுவதற்கான வாய்ப்பு நிச்சயம் இல்லை. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைப்பது முடியாத காரியம். அவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வாய்ப்பு இல்லை. அது காலம் கடந்துவிட்டது” என்றார்.