புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக ஆக்குவதை எதிர்த்து தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மின்துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் மின் வினியோகத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மின்துறை பொறியாளர்கள், தொழிலாளர்கள் தனியார் மய எதிர்ப்பு போராட்ட குழுவை அமைத்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் மின்துறை தனியார் மயத்தை எதிர்த்து அரசியல் கட்சிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் நாளை துணைநிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் மின்துறை தனியார் மய எதிர்ப்பு போராட்ட குழு சார்பில், ‘மின்துறையை பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் முல்லை நகரில் உள்ள அரசு ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் புதுச்சேரி மின்துறை தனியார் மயத்தை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்துவது, இதனால் ஏற்படும் பாதிப்புகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்ச்சிகள் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் இதில் தமிழ்நாடு மின்சார வாரிய தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு, புதுச்சேரி மின்துறை தனியார் மயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் புதுச்சேரி மின்துறை ஊழியர்களுக்கு தங்களது முழு ஆதரவை தெரிவித்தனர்.