புதுச்சேரியின் பிரபல சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டினின் முகநூல் பக்கத்தில் அவதூறு மற்றும் ஆபாசமான கருத்துகளை பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜேசிஎம் மக்கள் மன்றத்தின் தலைவர் வில்லியம்ஸ் ரீகன் ஜான்குமார், புதுச்சேரி சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார்.


அந்த புகாரின் விவரம் வருமாறு….
புதுச்சேரியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருபவரும், புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க முக்கிய திட்டங்களை வகுத்து வருபவருமான சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின். அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தான் ஆற்றிவரும் பணிகள் குறித்து அவ்வப்போது பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில் சமீபத்தில் புதுச்சேரியின் அடையாளமாக விளங்கும் ஆயி மண்டபம், பராமரிப்பின்றி உள்ளது குறித்தும் அதனை புனரமைக்க தான் தயாராக உள்ளது குறித்தும் பதிவு ஒன்றை இட்டிருந்தார். அந்த பதிவின் கீழ் போலி முகநூல் கணக்குகளை கொண்ட சிலர் அவதூறான மற்றும் ஆபாசமான கருத்துகளை பதிவு செய்துள்ளனர். இது ஜோஸ் சார்லஸ் மார்டினின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
புதுச்சேரியில் ஜோஸ் சார்லஸ் மார்டின் ஆற்றிவரும் பணிகள் குறித்த ஆற்றாமையில் உள்ளவர்களும், அவரது வழிகாட்டுதலில் செயல்பட்டு வரும் ஜேசிஎம் மக்கள் மன்றத்தின் செயல்பாடுகளை பொறுக்காதவர்களும் இவ்வாறு அவதூறான கருத்துகளை பதிவிட்டதாக கருதுகிறோம்.
சம்பந்தப்பட்ட அந்த போலி முகநூல் கணக்குகளை உடனடியாக முடக்குமாறும், அவர்கள் மேலும் இவ்வாறு தரந்தாழ்ந்து நடக்காதவாறு முன்கூட்டியே தடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.