புதுச்சேரி அரசியல் களத்தில் புதியதொரு மாற்றத்திற்கு வித்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஜேசிஎம் மக்கள் மன்றத்தில் சேர்வதற்கு இளைஞர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எந்தவொரு விஷயத்திற்கும் நல்லதொடக்கம் அமைய வேண்டும் என்பார்கள். அதுபோல கடந்த 27-ந் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் பிரபல சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் ஜேசிஎம் மக்கள் மன்றம் தொடங்கப்பட்டது. மன்றத்தின் தலைவராக ரீகன் நியமிக்கப்பட்டார்.
இன்றைய காலகட்டத்தில் புதுச்சேரியில் நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டம், மாறிவரும் தொழில்நுட்ப யுகத்தின் சவால்களை எதிர்கொள்வது, உயர்கல்வியில் உள்ள வாய்ப்புகள், சுயதொழில் தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் போன்றவற்றை வகுத்துத் தர தற்போதுள்ள எந்த அரசியல் கட்சியும் சிந்தித்து பார்க்கவில்லை.
இதனால் புதுச்சேரியின் எதிர்கால நம்பிக்கைகளான இளைஞர்கள், செய்வதறியாது திகைத்து தடுமாறி நிற்கின்றனர். அந்த இளைஞர்களின் நம்பிக்கை தீபமாக, வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது தான் இந்த ஜேசிஎம் மக்கள் மன்றம்.
அதுமட்டுமல்ல ஒட்டுமொத்த புதுச்சேரி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை வகுப்பது, வெளிநாடுகள் – வெளிமாநிலங்களில் உள்ளது போல் சமூக மேம்பாட்டுப் பணிகளை புதுவையிலும் நடைமுறைப்படுத்த செயலாற்றுவதும் ஜேசிஎம் மக்கள் மன்றத்தின் லட்சியங்களில் ஒன்றாகும்.
ஜேசிஎம் மக்கள் மன்றத்தின் இலச்சினையை வெளியிட்ட பிரபல சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின், சிங்கப்பூரைப் போல – துபாயைப் போல புதுச்சேரியையும் மாற்றிக் காட்டுவதே தன் லட்சியம் என உறுதிபட கூறினார். இதனைத் தொடர்ந்து ஜேசிஎம் மக்கள் மன்றத்திற்கான செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
புதுச்சேரியின் எல்லா சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் மன்றத்தின் அலுவலகங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே மக்கள் மன்றம் தொடங்கப்பட்டு 2 நாட்கள் மட்டுமே ஆனநிலையிலும், இந்த மன்றத்தில் சேர புதுச்சேரி இளைஞர்களிடையே பெரும் ஆர்வம் காணப்படுகிறது.
மக்கள் மன்றத்தின் செயலியை தரவிறக்கம் செய்தும், நேரடியாக மக்கள் மன்ற தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டும், மன்றத்தின் தலைவர் ரீகன் அவர்களை சந்தித்தும் மன்றத்தில் சேர ஏராளமான இளைஞர்கள் முனைப்புக் காட்டி வருகின்றனர்.
புதுச்சேரியில் புதியதொரு மாற்றம் வேண்டும் என்ற வேட்கை இளைஞர்கள் மத்தியில் எவ்வளவு இருந்தால், மக்கள் மன்றத்தில் சேர இவ்வளவு ஆர்வம் காட்டுவார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. விரைவில் ஜேசிஎம் மக்கள் மன்றம் புதுவை அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தும் என அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.