குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருணனுக்கு, சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்த ஜெகதீப் தன்கர் உடல்நிலையை காரணம் காட்டி, கடந்த ஜூலை 21ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, குடியரசு துணைத் தலைவர் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. போட்டி இருக்கும் பட்சத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி, 15ஆவது குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் மகாராஷ்டிர ஆளுநரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, இண்டியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். மொத்தமுள்ள 767 வாக்காளர்களில், 452 வாக்குகள் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாகவும், சுதர்ஷன் ரெட்டிக்கு ஆதரவாக 300 ஓட்டுகளும் பதிவாகின. 15 ஓட்டுகள் செல்லாதவை என தேர்தல் அதிகாரி பி.சி.மோதியால் அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனை, சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘அவரது பரந்த அனுபவமும், அர்ப்பணிப்பும் நமது நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த பெரிதும் உதவும் என்றும், இந்த மதிப்புமிக்க பொறுப்பை ஏற்று, நமது தேசத்தை ஞானத்துடனும், அர்ப்பணிப்புடனும் வழிநடத்தி, வெற்றிபெற வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.