புதுச்சேரியில் நடைப்பாதையில் நடந்து சென்ற சிறுமியை தெரு நாய் ஒன்று கடித்து குதறிய அதிர்ச்சி சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
அண்மை காலமாக தெரு நாய்கடியால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தெருநாய்கடிக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், புதுச்சேரியில் சிறுமியை தெருநாய் ஒன்றி கடித்த பகீர் வீடியோ வெளியாகியுள்ளது.
புதுச்சேரி வீதிகளில் இரவும், பகலும் கட்டுப்பாடின்றி அலைந்து திரியும் தெருநாய்களின் எண்ணிக்கையும், அவற்றின் ஆபத்துகளும் அபாயகரமான அளவில் அதிகரித்துள்ளன. இந்நிலையில், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதித்து அச்சுறுத்தி வரும் தெருநாய்கள், குழந்தைகள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், முதியவர்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்கள் என்று எவரையும் பாகுபாடின்றி துரத்திச் சென்று கடிக்கும் சம்பவங்கள் சர்வ சாதாரணமாகிவிட்டன. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி, விபத்துகள் ஏற்படுத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. சொறிபிடித்த, வெறிபிடித்த நாய்களின் நடமாட்டம் சுகாதாரச் சீர்கேட்டிற்கும், மன உளைச்சலுக்கும் காரணமாக அமைகிறது.
இந்நிலையில் நேற்று நகரின் மையப்பகுதியான எஸ்.வி.பட்டேல் சாலையில், நடைபாதையில் சென்ற சிறுமியை தெருநாய் ஒன்று கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் சிறுமி நடந்து செல்வதும், அப்போது தெருநாய் ஒன்று சிறுமியின் கடித்து, பலத்த காயத்துடன் சிறுமி துடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனால் புதுச்சேரியில் சாதாரணமாக நடந்து செல்வது கேள்விக்குறியாகியுள்ளது.