புதுச்சேரியில் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகத்தால் 3 பேர் உயிரிழந்ததாக கூறி சுயேட்சை எம்.எல்.ஏ நேரு தலைமையில் பொதுமக்கள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி உருளையன்பேட்டை நேரு நகர், கோவிந்தசாலை பகுதிகளிலும், நெல்லித்தோப்பு தொகுதி சக்தி நகர், பிள்ளைதோட்டம், பெரியார் நகர், காமராஜர் நகர் தொகுதி சாரம்,ஜீவா நகர், கவிக்குயில் நகர் போன்ற பகுதிகளில் அசுத்தமான குடிநீரை பருகிய பொதுமக்களில் நூற்றுக்கணக்கானோர் வாந்தி, பேதி ஏற்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் உருளையன்பேட்டை கோவிந்தசாலை பகுதியில் இரண்டு பெண்கள், ஒரு ஆண் என 3 பேர் அசுத்தமான குடிநீரை குடித்ததால் இறந்துவிட்டதாக கூறி அந்த தொகுதியின் சுயேட்சை எம்எல்ஏ நேரு தலைமையில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அவரிடம் தலைமை பொறியாளர் வீரச்செல்வம் தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திடீரென ஆவேசமடைந்த பொதுமக்கள் திடீரென புஸ்ஸி வீதி- செஞ்சி சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் இரண்டு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து ஊர்வலமாக வந்த பொதுமக்கள் தலைமை பொறியாளரிடம் மாசு கலந்த நீரை காண்பித்து கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பதிலளித்த அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அனைத்து பகுதிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.