புதுச்சேரி மாநில அரசின் சின்னமாக விளங்கும் ஆயி மண்டபம் பராமரிப்பு இன்றி இருப்பது வேதனை அளிப்பதால் அதனை தானே தனது சொந்த செலவில் புதுப்பிக்க இருப்பதாக சமூக சேவகரான ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பாரதி பூங்காவின் அடர்ந்த மரங்களுக்கு நடுவில் வெண்ணிற காவிய மண்டபமாக இருப்பது ஆயி மண்டபம். இது புதுச்சேரி மாநில சின்னமாக விளங்குகிறது. கிரேக்க – ரோமானிய கட்டடக்கலை அழகுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவுச்சின்னம் 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆயி என்ற பெண் தான் வாழ்ந்த மாளிகையை இடித்து குளம் வெட்டி மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்ததால் அவரின் நினைவு சின்னமாக அங்கு குளம் அமைக்கப்பட்டது.
புதுச்சேரியின் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கிய அந்த பெண்ணின் தியாகத்தை போற்றும் விதமாக அங்கு மூன்றாம் நெப்போலியன் உத்தரவின்பேரில் மண்டபம் அமைக்கபப்ட்டது. கிரேக்க கட்டிட கலையின் அழகையும், வரலாற்றையும் எடுத்துரைக்கும் இந்த ஆயி மண்டபம் தற்போது பரமாரிப்பு இன்றி காணப்படுகிறது.
இந்த நிலையில் புதுச்சேரியின் சுற்றுலா தளமாக விளங்கும் ஆயி மண்டபம் பராமரிப்பு இன்றி இருப்பதால் அதனது தனது சொந்த செலவில் புதுப்பிக்க இருப்பதாக சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நம் மாநிலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விரும்பி செல்லக் கூடிய இடங்களில் பாரதி பூங்கா முக்கியமான இடமாகும். அப்பூங்காவின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள நமது அடையாள சின்னமான ஆயி மண்டபத்தை, பொதுப்பணித்துறை பராமரிக்காமலேயே வைத்திருப்பது வருத்தம் அளிக்கிறது நம் மாநிலத்தின் கட்டடக்கலையை உலகிற்கு எடுத்துரைக்கும் வரலாற்று சிறப்புமிக்க நினைவுச் சின்னத்தை பாதுகாப்பது நம் கடமையாகும். புதுச்சேரி அரசு அனுமதி அளித்தால் ஆயி மண்டபத்தை புதுப்பிக்கும் பணியை எனது சொந்த செலவில் மேற்கொள்ள தயாராக உள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.