புதுச்சேரி வணிகர்கள். ஆன்லைன் வர்த்தகப் போட்டியைச் சமாளிக்கும் விதமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து வணிகர்களையும் ஒருங்கிணைத்து ‘புதுச்சேரி பஜார்’ என்ற புதிய செயலியை உருவாக்கியுள்ளனர்.
பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களான பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்டவற்றின் வருகையால், அவற்றின் ஆன்லைன் வர்த்தகத்தால் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள சிறு வணிகர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். தங்களுடைய தொழிலை எப்படி மீட்டெடுப்பது என்று தெரியாமல் வணிகர்கள் தவித்து வரும் நிலையில் புதுச்சேரி மாநில வணிகர்கள் ஒரு புது முயற்சியில் இறங்கியுள்ளனர்.
‘புதுவை பஜார்’ என்ற செயலியை அவர்கள் உருவாக்கி அதில் புதுச்சேரியில் மருத்துவமனை, மருத்துவர்கள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள், சுற்றுலா தளங்கள், கேளிக்கை என பெரும்பான்மையான வணிகர்களை இணைத்துள்ளனர். இந்த செயலியை நுகர்வோர் பதிவிறக்கம் செய்து கொண்டால் அவர்களுக்குத் தேவையான உணவு, மளிகை, எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோக பொருட்கள், கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட எந்த பொருளையும் உடனடியாக ஆர்டர் செய்து வாங்கிவிட முடியும்.
மேலும், பன்னாட்டு ஆன்லைன் வணிக நிறுவனங்களைவிட, புதுச்சேரி வணிகர்கள் உருவாக்கியுள்ள புதுவை பஜார் செயலியில் விலை குறைவாக கிடைக்கும் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புதுவை பஜார் வலைதளச் செயலிக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் என்று புதுச்சேரி வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இந்த செயலியின் மூலம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள சுமார் 5 லட்சம் வணிகா்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வியாபாரப் பணிகளை செய்யலாம் என்றும், அனைத்துவித வியாபார செயல்பாடுகளுக்கான ஒன்-ஸ்டாப் என சொல்லக்கூடிய வகையில் இந்த ‘புதுவை பஜார் செயலி’ இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.