சந்திர கிரகணத்தையொட்டி புதுச்சேரியில் இன்று மாலை கோவில்களில் நடை அடைக்கப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் தொலைநோக்கி மூலம் சந்திரகிரகணத்தை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று இரவு 9.57 மணி முதல் நள்ளிரவு 11.43 மணிவரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வு சந்திர கிரகணம் என கூறப்படுகிறது. இந்த நிகழ்வின் போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால் சில நிமிடங்கள் சந்திரன் மறைக்கப்படும். இந்த வானியல் நிகழ்வு இன்று இரவு நிகழ இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இன்று இரவு நிகழ இருக்கும் சந்திர கிரகணத்தின் போது நிலவு ரத்த சிவப்பாக காட்சியளிக்கும் என்றும் கூறப்பட்டுளது. ஆசியாவிலேயே இந்தியா, சீன பகுதிகளில் மட்டுமே நிலவு, ரத்த சிவப்பாக காட்சியளிக்கும் (blood moon) அரிய நிகழ்வு நடைபெறுவதாக கூறிய வானிலையாளர்கள், முழு சந்திர கிரகணத்தையும் கிழக்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆஸ்திரேலியாவில் முழு சந்திர கிரகணத்தை காண முடியும் என கூறியுள்ளனர்.
சந்திர கிரகணம் காரணமாக மணக்குள விநாயகர் கோவில், வரதராஜபெருமாள், கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவில், வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில், திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோவில், வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் உள்ளிட்ட கோவில்களில் இன்று மாலை 5 மணி முதல் நடை சாத்தப்பட உள்ளது.
மேலும் இந்த கோவில்கள் அனைத்திலும் நாளை காலை முதல் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு, அதன் பின்னர் நடை திறக்கப்படும். புதுச்சேரி அறிவியல் இயக்கம் சார்பில் இன்று இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12.30 வரை கடற்கரை சாலை காந்தி சிலை அருகே தொலை நோக்கிகள் மூலம் சந்திர கிரகணத்தை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று மதியம் உச்சிகால பூஜையுடன், காந்தி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆலயத்தின் நடை சாத்தப்பட்டது.