ஊருக்குள் செல்லாமல் புறவழிச்சாலையில் பேருந்து செல்வதால், தனியார் பேருந்து கண்ணாடி மீது கல்லை எறிந்த இளைஞர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் இருந்து மதகடிப்பட்டு வரை கிருஷ்ணராஜ் என்பவருக்கு சொந்தமான தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நேற்று முன்தினம் (புதன்கிழமை) இரவு 7:45 மணியளவில் மதகடிப்பட்டு பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிகொண்டு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதுச்சேரி நாகப்பட்டினம் புறவழிச்சாலையில் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது இரண்டு மர்ம நபர்கள் ஓடும் பேருந்தின் முன்பக்க கண்ணாடி மீது கல்லை வீசியதில் முன்பக்க கண்ணாடி முற்றிலுமாக சிதைந்து பேருந்துக்குள் விழுந்தது. இதில் அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் பேருந்தை சாமார்த்தியமாக நிறுத்தியதில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதனையடுத்து பேருந்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளுடன் பேருந்து உரிமையாளர் கிருஷ்ணராஜ், வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் பேருந்தின் வலது புறமாக முன்னேறி சென்று, கல்லை வீசிவிட்டு செல்வது பதிவாகியிருந்தது. அக்காட்சிகளை கொண்டு அரியூர் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநரான ஐயப்பன் மற்றும் வைத்தியநாதன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில், சமீபத்தில் விழுப்புரம் – நாகப்பட்டினம் புறவழிச்சாலை அமைக்கப்பட்டதிலிருந்து பேருந்துகள் தங்களது ஊரான அரியூர் பகுதி சர்வீஸ் சாலையில் செல்லாமல் புறவழிச் சாலையிலேயே செல்வதாகவும், இதுகுறித்து போக்குவரத்து ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
மேலும், இதனால் தங்களின் ஊரில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவதால் ஆத்திரத்தில் பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக அவர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரையும், காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.