ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், திங்களன்று நடைபெற்ற ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக இப்ராஹிம் ஜோர்டான் 40 பந்துகளில் 63 ரன்களும், தனது முதல் அரைசதத்தை நிறைவு செய்த செடிதுல்லா அடல் 40 பந்துகளில் 54 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய, ஐக்கிய அரபு அமீரகம் அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதுவரை 98 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரஷித் கான் 165 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
முன்னதாக, நியூசிலாந்து வீரர் டிம் சவுதி 164 விக்கெட்டுகள் (126 போட்டிகள்) கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் இதுவரை 664 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.