சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும், சமீபத்தில் ஐபிஎல் தொடரில் இருந்தும் இந்திய வீரர் அஸ்வின் ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்த நிலையில், வீரர்களுக்கான ஏலத்தில் மீண்டும் பதிவு செய்துள்ளார்.
சென்னையை சேர்ந்த 38 வயதான அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தார்.
டெஸ்ட் போட்டிகளில் இந்திய ஜாம்பவான் அனில் கும்பிளேவுக்கு (619 விக்கெட்) அடுத்தபடியாக, அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றவர் அஸ்வின். மேலும், ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் 7-வது இடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலி அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற போவதாக அறிவித்து அதிர்ச்சியை அளித்தார். மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு, சி.எஸ்.கே அணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார்.
சமீப நாட்களில் அஸ்வினுக்கும் சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் இடையே பொதுவெளியில் ஏற்பட்ட சில கருத்து பரிமாற்றங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக தன்னை அணியிலிருந்து விடுவிக்குமாறு அணி நிர்வாகத்திடம் கேட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், ஐபிஎல் போலவே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இண்டர்நேஷனல் லீக் டி20 தொடருக்கான வீரர்கள் ஏலத்தின் தனது பெயரை ரவிச்சந்திரன் அஸ்வின் பதிவு செய்துள்ளார். வீரர்கள் ஏலம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி நடைபெற உள்ளது.
ஐஎல்டி20 லீக் சீசன் வரும் டிசம்பர் 2 முதல் ஜனவரி 4-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் விளையாடுகின்றன. ஏலத்தில் பங்குபெற விரும்பும் வீரர்கள் பதிவு செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 10 என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.