ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கான நேரத்தை அமீரக கிரிக்கெட் வாரியம் மாற்றி அமைத்துள்ளது.
இதுவரை ஒருநாள் தொடராக நடைபெற்று வந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு, டி20 போட்டிகளாக நடத்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரை கவனத்தில் கொண்டு, இந்த மாற்றத்தை ஆசிய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டது.
அதன்படி, ஆசியக்கோப்பை போட்டிகள் செப்டம்பர் 09ஆம் தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுவதாக அட்டவணை வெளியிடப்பட்டது. ’ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, ‘பி’ பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில், குறிப்பாக அபுதாபி மற்றும் துபாய் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்திய அணி செப்டம்பர் 10ஆம் தேதி தனது முதல் போட்டியில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக துபாயில் விளையாட உள்ளது.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு போட்டியை நடத்துவதில்லை. மாறாக, உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் மோதிவருகின்றன. அந்த வகையில், ஆசியக்கோப்பை தொடரில் இந்தியாவும், பாகிஸ்தானும் செப்டம்பர் 14ஆம் தேதி, துபாய் சர்வதேச மைதானத்தில் மோதவுள்ளன.
போட்டிகள் அனைத்தும் உள்ளூர் நேரப்படி மாலை 06.00 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 07.30 மணி) தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அங்கு நிலவும் அதீத வெப்பத்தை, அனைத்து நாட்டு வீரர்களும் சமாளிக்கும் வகையில் அரை மணி நேரம் தாமதமாக துவங்குவதாக அமீரக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதனால், ஆசியக் கோப்பை போட்டிகள் மாலை 6.30 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 08.00 மணி) தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மொத்தமுள்ள 19 போட்டிகளில் 18 போட்டிகள் மாலை 06.30 மணிக்கு தொடங்கும். செப்டம்பர் 15ஆம் நடைபெறவுள்ள ஐக்கிய அரபு எமீரகம் மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான போட்டி மட்டும் மாலை 04.00 (இந்திய நேரம், மாலை 05.30 மணி) மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.