இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை கைப்பற்றிய கையோடு, இந்திய அணியின் ஜாம்பவான்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் டி20 போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அவர்களை தொடர்ந்து ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் தனது ஓய்வினை அறிவித்தார்.
அதன் பிறகு, இந்தியாவின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சமீபத்தில், ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வினை திடீரென அறிவித்தார்.
அவர்களை தொடர்ந்து தற்போது, இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ராவும் தனது ஓய்வினை அறிவித்துள்ளார். 42 வயதாகும் அமித் மிஸ்ரா, 2003ஆம் ஆண்டு முதல், 2017 ஆண்டு வரை இந்திய அணிக்காக 22 டெஸ்ட் போட்டிகள், 36 ஒருநாள் போட்டிகள், 10 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
அதேபோல் ஐபிஎல் போட்டிகளில் 4 அணிக்காக விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லி டேர்டேவில்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக அவர் விளையாடியுள்ளார்.
அமித் மிஸ்ரா 2008 முதல் 2024ஆம் ஆண்டு வரை 162 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, 174 விக்கெட்டுகளை கைப்பற்றி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளார். அதுதவிர, அதிக முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை (3 முறை) வீழ்த்தியவராகவும் அவர் திகழ்கிறார்.
இது குறித்து கூறியுள்ள அமித் மிஸ்ரா, “இன்று, 25 ஆண்டுகளுக்குப் பிறகு, கிரிக்கெட்டிலிருந்து நான் ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன். கிரிக்கெட் விளையாட்டுதான் எனது முதல் காதல், எனது ஆசிரியர் மற்றும் எனது மிகப்பெரிய மகிழ்ச்சிக்கான ஆதாரமாக இருந்து வருகிறது.
இந்தப் பயணம் எண்ணற்ற உணர்ச்சிகளால் நிறைந்துள்ளது. பெருமை, கஷ்டம், கற்றல் மற்றும் அன்பு ஆகிய முக்கிய தருணங்கள் அமைந்தது. பிசிசிஐ, ஹரியானா கிரிக்கெட் சங்கம், பயிற்சியாளர்கள், துணை ஊழியர்கள், சக ஊழியர்கள் மற்றும் மிக முக்கியமாக, ஒவ்வொரு அடியிலும் எனக்கு நம்பிக்கையும் ஆதரவும் அளித்த ரசிகர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
இந்த அத்தியாயத்தை முடிக்கும்போது, என் இதயம் நன்றியுணர்வு மற்றும் அன்பால் நிறைந்துள்ளது. கிரிக்கெட் தான் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது, என்னை நானாக மாற்றிய விளையாட்டுக்கு, இப்போது, நான் திரும்பக் கொடுக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.