ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கு எதிரானப் போட்டியில், இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றிபெற்றது.
17ஆவது ஆசியக்கோப்பை போட்டிகள் நேற்று (செப்டம்பர் 09) தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ’ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, ‘பி’ பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில், குறிப்பாக அபுதாபி மற்றும் துபாய் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி, ஹாங்காங் அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்நிலையில், தொடரின் 2ஆவது போட்டியில் பலம் பொருந்திய இந்திய அணியும், ஐக்கிய அரபு அமீரகம் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரகம் அணி 13.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 57 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணியில் அதிகப்பட்சமாக தொடக்க ஆட்டக்காரர்களான அலிஷன் ஷரஃபு 22 ரன்களும், முஹமது வாசிம் 19 ரன்களும் எடுத்தனர். அதற்கு அடுத்தபடியாக ராகுல் சோப்ரா 3 ரன்கள் எடுத்தார். நான்கு வீரர்கள் 2 ரன்களும், மூன்று வீரர்கள் 1 ரன்னும் எடுத்தனர். ஒருவர் டக் அவுட் ஆனார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஷிவம் துபே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 16 பந்துகளில் (3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்) 30 ரன்கள் எடுத்து அவுட்டானார். சுப்மன் கில் 9 பந்துகளில் (2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) 20 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 2 பந்துகளில் 7 ரன்களும் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தனர்.
ஐக்கிய அரபு அமீரகம் எடுத்த 57 ரன்கள் தான், இந்திய அணிக்கு எதிராக, ஒரு அணியால் அடிக்கப்பட்ட குறைந்த ஸ்கோர் ஆகும். இதற்கு முன்னதாக, 2023ஆம் ஆண்டு நியூசிலாந்து அணி 66 ரன்கள் எடுத்ததே குறைந்தபட்ச ஸ்கோர் ஆக இருந்தது. அதேபோல், இந்திய அணி குறைந்த பந்துகளில் (27 பந்துகள்) இலக்கை எட்டிய போட்டியாக இது அமைந்தது.