இந்தியாவில் நடைபெறும் ஆசியக் கோப்பை ஹாக்கித் தொடரில் விளையாட மறுப்புத் தெரிவித்த, பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து விலகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரபலமான சுற்றுலா தளமான பஹல்காமில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். காஷ்மீர், கேரளா, குஜராத், அசாம் எனப் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர். இதற்கு இந்தியா ஆபரேஷன் செந்தூர் மூலம் பதிலடி கொடுத்தது.
இந்த யுத்தத்திற்கு பிறகு, இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. ராணுவம் மற்றும் வெளியுறவுக் கொள்கையையும் தாண்டி, விளையாட்டிலும் இந்த யுத்தம் பிரதிபலித்து வருகின்றது.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற 2-வது உலக சாம்பியன்ஸ் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில், இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. இதில், முதலாவது அரையிறுதி போட்டி இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் பஹல்காம் தாக்குதல் காரணமாக, பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் அணி விளையாட மறுப்புத் தெரிவித்ததால், போட்டி கைவிடப்பட்டது. நாட்டை விட பெரியது வேறெதுவுமில்லை என்று இந்திய வீரர்கள் தெரிவித்தனர். இதனால், பாகிஸ்தான் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.
இந்நிலையில், இன்று பீகாரில் 8 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறுகிறது. இதில், மூன்று முறை சாம்பியனான பாகிஸ்தான், பாதுகாப்பு காரணங்களுக்காக ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து விலகியதால், அந்த அணிக்கு பதிலாக வங்கதேசம் களமிறங்க உள்ளது. ஆசியக் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி விலகுவது இதுவே முதன்முறையாகும். மேலும், ஆசியக் கோப்பையை கடந்த 1989ஆம் ஆண்டு வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கூறியுள்ள இந்திய ஹாக்கி சம்மேளன தலைவர் திலிப் குமார் டிர்கி, “பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடுவதற்கு எந்தவித மறுப்பையும் தெரிவிக்கவில்லை. தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அவர்களின் சொந்த முடிவு” என்றார்.
ஆகியக் கோப்பைத் தொடரில் இருந்து பாகிஸ்தான் விலகுவதால், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழக்க நேரிடும். ஆசியக் கோப்பையை வெல்லும் அணி 2026 உலகக் கோப்பையில் நேரடியாக பங்குபெறும்.
அதே நேரத்தில் இரண்டாவது முதல் ஆறாவது இடம் வரை உள்ள அணிகள் தகுதிச் சுற்றுக்குள் நுழையும். பாகிஸ்தான் தற்போது ஆண்களுக்கான உலக ஹாக்கி தரவரிசையில் 15வது இடத்தில் உள்ளது. மேலும், உலகக் கோப்பைக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.