அதிகமுறை ஆட்டநாயகன் விருது பெற்றவர்கள் பட்டியலில், ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ரஷா முதலிடத்தில் உள்ளார்.
இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி, ஹராரேவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இலங்கை அணியின் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், நியூயார்க்கில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில், 77 ரன்கள் எடுத்திருந்தது. அதேபோல், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 82 ரன்களை பதிவு செய்துள்ளது.
இலங்கை அணியில் அதிகப்பட்சமாக கமில் மிஷரா 20 ரன்களும், சரித் அசலங்கா 18 ரன்களும், தசுன் ஷனகா 13 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்களில் எவருமே இரட்டை இலக்கத்தை தொடவில்லை. அட்டகாசமாக ஆடிய ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் சிக்கந்தர் ரஷா மற்றும் ப்ராட் எவன்ஸ் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 14.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதனால், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. 3 விக்கெட்டுகள் வீழ்த்திய சிக்கந்தர் ரஷா ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார்.
இதன் மூலம், டி20 போட்டிகளில் அதிகமுறை ஆட்டநாயகன் விருது பெற்றவர்கள் பட்டியலில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் இருவரையும் பின்னுக்கு தள்ளி உள்ளார். 125 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சிக்கந்தர் ரஷா, 17 முறை ஆட்டநாயகன் விருதினைப் பெற்றுள்ளார். முன்னதாக, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் இருவரும் தலா 16 முறை ஆட்டநாயகன் விருதினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.