மூணாறு செல்லும் போடிமெட்டு மலைச்சாலையில் சுற்றுலா வாகனம் தலைகுப்புற கவிழ்ந்ததில், மூன்று நபர்கள் படுகாயங்களுடன் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. போடிமெட்டு மலைச்சாலை 4800 அடி உயரமும் 17 ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகள் நிறைந்த இந்த மலைச்சாலை கேரளா மாநிலம் மூணாறு செல்லும் முக்கிய சாலை ஆகும். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து மூணாறு செல்லும் சுற்றுலா வாகனங்கள் பயணிக்கும் முக்கிய சாலை இதுவாகும்.
தொடர் விடுமுறை காரணமாக தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் படித்துக் கொண்டிருக்கும் 21 முனைவர் பட்ட பயிற்சி மாணவ, மாணவியர்கள் தஞ்சாவூரில் இருந்து சுற்றுலா வாகனத்தில் போடிமெட்டு சாலை வழியாக மூணாருக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி வந்துள்ளனர்.
இந்நிலையில் நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் போடிமெட்டு மலைச்சாலையில் 3வது கொண்டை ஊசி வளைவில், சுற்றுலா வாகனம் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்தது. மேலும், மலைச் சாலையில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குரங்கணி காவல்துறையினர் மற்றும் போடிநாயக்கனூர் தீயணைப்பு பேரிடர் மீட்பு துறையினர் வாகனத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
டிரைவர் உட்பட சுமார் பத்து நபர்கள் காயமடைந்த நிலையில், இரண்டு பெண்கள் உட்பட மூன்று நபர்கள் படுகாயமடைந்து இருந்ததால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக மலைச்சாலையில் வாகனம் உருண்டு விடாமல் தடுப்புச் சுவரிலேயே சாய்ந்து நின்றதால் உயிரிழப்பு போன்ற பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
வாகனம் முற்றிலும் சேதம் அடைந்த நிலையில் மீட்பு வாகன உதவியுடன் விபத்து ஏற்பட்ட வாகனம் மீட்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தாமதம் ஏற்பட்டது. விபத்து குறித்து குரங்கணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.