குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிக்காமல், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கின்றன என்று பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை, புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “இன்று சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாள் என்பதை, தமிழக மக்களும் பாஜகவின் ஒவ்வொரு தொண்டர்களும் நினைக்கிறோம். இன்று நம்முடைய துணை குடியரசு தலைவர் தேர்தலில், தமிழக வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் களம் இறங்கி இருக்கிறார். வெற்றி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் கிடைக்கும் என்பது நிச்சயம் தெரியும்.
சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு கல்லூரி காலத்தில் இருந்து மக்களுக்கான பணியில் தன்னை அர்ப்பணித்து பாடுபட்டவர். மாநில தலைவராக, இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக, தொகுதி மக்களுக்கும் தமிழகத்திற்கும் சிறந்த பணிகளை ஆற்றியுள்ளார். மூன்று மாநிலங்களை ஒரே நேரத்தில் கவனித்து ஆளுநராகவும் சிறப்பாக பணியாற்றியவர். மகாராஷ்டிரா ஆளுநராக பணியாற்றினார்.
தமிழ் தமிழர் என பேசிக் கொண்டு இருக்கும் திமுக, டெல்லியிலே துணை ஜனாதிபதி போட்டிக்கு ஒரு தமிழர் போட்டியிடும் போது, தமிழர்களின் முதுகில் குத்துவது போல ஒரு துரோகத்தை செய்து கொண்டு இருக்கிறார்கள். தமிழர்களின் வாழ்க்கை, உலகம் முழுவதும் இருக்கக் கூடிய தமிழர்களுக்கான அங்கீகாரத்தை, பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று அளித்திருக்கிறார்.
ஆனால், இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை, தமிழர்களுக்கான துரோகத்தை திமுக செய்து கொண்டு இருக்கிறது. இதற்கு முன்பாக மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு வேட்பாளர் அறிவிக்கப்பட்ட போது, கட்சி சார்பு இன்றி அத்தனை மகாராஷ்டிரா காரர்களும் பிரதீபா பாட்டீலை ஆதரித்தார்கள்.
ஒடிசாவை சேர்ந்த திரௌபதி முர்மு அவர்கள் குடியரசு தலைவராக ஆகும்பொழுது ஒடிசாவை சேர்ந்த அனைவரும் தங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு கொடுத்தார்கள்.
ஆனால் தமிழர்கள் எல்லாம் ஒன்று பட வேண்டும் என பேசுகிற திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் இன்று நம்முடைய தமிழர் வேட்பாளராக நிற்கும்பொழுது, மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், தமிழருக்கு துரோகத்தை செய்து கொண்டு இருக்கிறார்கள். வரலாறு இதை மன்னிக்கவே மன்னிக்காது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இருந்தார்கள், இருக்கிறார்கள், இருந்துகொண்டு தான் இருப்பார்கள். நம்முடைய ஒற்றை இலக்கு என்பது 2026இல் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவது தான். இதை உணர்ந்து கொண்டு அத்தனை பேரும், ஓரணியில் இணைய வேண்டும் என்பது தான் பாஜக தலைமையின் எண்ணம்.
தேர்தலுக்கு இன்னும் சிறிது காலம் இருக்கிறது. அதனால், வெகு நிச்சயமாக கூட்டணிக்குள் இருக்கிற அனைத்து சிக்கல்களும் விரைவில் சரி செய்யப்பட்டு, திமுகவுக்கு எதிராக ஒரு வியூகம் வகுக்கப்பட்டு, அதற்கான செயல் திட்டத்தில் இருக்கிறோம் நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம் என கூறினார்.