சென்னை மெட்ரோ ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை மெட்ரோ ரயில் சேவையில் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 5ம் தேதி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் மெட்ரோ ரயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதை கேட்ட ரயில்வே நிர்வாகம் கோயம்பேடு மார்க்கமாக செல்லும் மெட்ரோ ரயில்களில் வெடிகுண்டு நிபுணர்களை வைத்து தீவிர சோதனை மேற்கொண்டனர்.
மேலும் இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக மெட்ரோ ரயில்வே நிர்வாகமும், கோயம்பேடு போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர். அதில் மெட்ரோ ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது 17 வயது சிறுவன் என்பதும், அவர் விழுப்புரத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, அந்த சிறுவனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெட்ரோ ரயிலில் சிறுவன் பயணித்தாரா, அவருக்கும் இந்த வெடிகுண்டு மிரட்டலும் என்ன தொடர்பு, சிறுவனுக்கு பின்னால் யாரேனும் இருக்கிறார்களா என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.