சென்னையின் கே.கே.நகர், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டனர்.
சட்டவிரோத பணிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்க துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து புகாரின் அடிப்படையில் இரண்டாவது நாளாக சோதனையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் அரவிந்த் ஜெயின், சென்னை புரசைவாக்கம், பிளவர் சாலை, கிரீன் அவென்யூ பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அம்பத்தூர் பகுதியில் பெரிய அளவில் மருந்து தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், அரவிந்த் ஜெயின் வெளிநாடுகளுக்கு மருந்து ஏற்றுமதி மற்றும் மூலப்பொருட்கள் இறக்குமதி தொடர்பாக சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக வருமான வரி சோதனையின் போது குற்றச்சாட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் சட்ட விரோத பரிமாற்றம் சட்டத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை நேற்று காலையில் இருந்து புரசைவாக்கத்தில் உள்ள அவரது வீடு மற்றும் கே.கே.நகரில் உள்ள அலுவலகம் என சென்னையில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக புரசைவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று 2 கார்களில் வந்த 8 அமலாக்கத்துறை அதிகாரிகள் காலையில் இருந்து அவரது வீட்டின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸாருடன், மற்ற இடங்களிலும் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையில், வழக்கு தொடர்பாக டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. சோதனையின் முடிவில் சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் சிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.