தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்திற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலினும் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார். தவெக சார்பில் திருச்சியில் இருந்து தனது முதல் பிரச்சார பயணத்தை தவெக தலைவர் விஜய் மேற்கொள்கிறார். இதற்கிடையே அண்மையில் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடும் செயலில் ஈடுபடுவதாக கூறி காங்கிரஸ் கட்சியின் பிரமாண்ட மாநாடு நெல்லையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டை தொடர்ந்து தமிழ்நாட்டில் கிராம கமிட்டிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் மாநாடு ஒன்றை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ள நிலையில், அதில் ராகுல்காந்தி பங்கேற்க வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் நடக்கும் கிராம கமிட்டி மாநாட்டில் பங்கேற்க ராகுல்காந்தி சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காக நவம்பர் மாதம் ராகுல்காந்தி தமிழகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாநாட்டில் குறைந்தபட்சம் 2 லட்சம் பேரை திரட்டி பிரமாண்டமாக நடத்த தமிழக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறபப்டுகிறது. இதற்காக முழு வீச்சில் தயாராக இருக்கும்படி அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது.
இந்த மாநாட்டை திருச்சி அல்லது சென்னையில் நடத்து வந்து குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும், ராகுல்காந்தியின் நேரத்தை பொறுத்து இடம் தேர்வு செய்யப்படும் என கூறப்படுகிறது.