அடுத்த ஆண்டு ஒவ்வொரு இளைஞரும் ஏரியை சுத்தம் செய்ய குறைந்தது 10 நாட்கள் நேரம் ஒதுக்கி தர வேண்டும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூரில் விநாயகர் சதுர்த்தி விழாவில் முன்னாள் மாநிலச் செயலாளர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதுமே பட்டி, தொட்டி எங்கும் இலட்சக்கணக்கான விநாயகர் பெருமானை பிரதிஷ்டை செய்து, மக்கள் ஜாதி மதத்தை மறந்து ஒன்றினைந்து எடுத்துச் செல்வதில் ஒரு ஆனந்தம் இருக்கிறது.
எந்த ஒரு மதத்திலும் கூட இப்படிப்பட்ட, களிமண்ணை விநாயகராக மாற்றி விநாயகருக்கு ஒரு உயிர் கொடுத்து, அதே விநாயகரை வேறு, வேறு நாட்களை, குளம், ஏரி, ஆறு என கரைத்து அதன் மூலம் கிடைக்கின்ற களிமண்ணை மீண்டும் பூமித் தாயின் மடியில் சேர்த்து, அது விவசாய பெருமக்களின் எல்லாவிதமான வாழ்வியலிலும் வேறு, வேறு சூழ்நிலையில் அந்தந்த ஏரியில் பயன்படுத்தப்படுகிறது. மீண்டும் அடுத்த ஆண்டு அதேபோல களிமண்ணில் விநாயகரை பிடித்து உயிரூட்டி ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. களிமண்ணை பிடித்து உயிரைக் கொடுத்து எடுத்துச் செல்வதில் பெரிய அறிவியல் இருக்கிறது.
கடந்த ஆண்டு இதயத் துடியலூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தப்பட்ட போது, கலவரத்தை யாரும் இங்கு ஏற்படுத்தவில்லை. இங்கு கலவரத்தை ஏற்படுத்தியதே காவல்துறை தான்.. ஊர்வலம் செல்லும் போது தொண்டர்களை சாட்டையால் அடிப்பது, போன்ற துன்பங்களை பக்தர்களுக்கு கொடுத்தார்கள். அதை இந்து முன்னணி கடுமையாக கண்டித்த பிறகு, மக்களுடைய கோபத்திற்கு ஆளான பிறகு இன்று காவல் துறை நண்பர்கள் இந்த ஆண்டு நிறைய தளர்வுகளை ஏற்படுத்தி உள்ளனர்.
இதுபோன்ற நிகழ்வுகள் மட்டும் தான் இந்தியன் என்கின்ற பெருமைக்குரிய பாரத அடையாளத்தை அந்த மனிதனுக்கு கொடுக்கிறது. அதனால் ஒவ்வொரு ஆண்டும் கூட புதிதாக ஒரு விநாயகரை வைப்பது பெரும் பாடாக இருக்கிறது. கடந்தாண்டு எவ்வளவு வைத்தீர்களோ? அதை மட்டுமே வையுங்கள் எனக் கூறுகிறார்கள். அதற்கு மேல் ஒரு விநாயகர் வைக்க வேண்டும் என்றாலும் கூட 20 பேரிடம் அனுமதி பெற வேண்டி உள்ளது.
இதே போல தமிழ்நாடு முழுவதுமே 2021இல் இருந்து ஆளும் கட்சியினர் போட்டு இருக்கக் கூடிய கடுமையான கட்டுப்பாடுகளில் ஒரு தளர்வு வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எவ்வளவு பிரச்சனைகள் தொடங்கி இருக்கிறது.
விநாயகர் சிலை செய்யும் இடத்தில் இருந்து தொடங்கும் பிரச்சனை நீண்டு கொண்டே இருக்கிறது. விநாயகர் செய்வதில் தொடங்கி, விநாயகர் சிலை கரைக்கும் வரை பிரச்சனைகள் தலைக்கு மேல் வருகிறது. அன்றில் இருந்து மக்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து இந்த விழாவை நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.
நம்முடைய கடமை, ராமகோபாலன் விட்டுச் சென்ற கடமையை நாம் செய்து கொண்டு இருக்கிறோமா என்பதை சிந்திக்க வேண்டும். எத்தனை ஏரி, குளங்களில் தண்ணீர் இருக்கிறது?. இங்கு இருக்கக் கூடிய இளைஞர்கள் எதை நினைத்தாலும் உங்களால் செய்ய முடியும்.
என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், இந்த ஆண்டு எவ்வளவு குதூகலமாக வீரத்தோடு விநாயகரை கரைப்பதற்கு தயாராக இருக்கிறோமோ, அதேபோல அடுத்த ஆண்டு ஒவ்வொரு இளைஞரும் அவர்கள் பகுதியில் இருக்கும் ஏரியை குறைந்தது 10 நாட்கள் ஆவது சுத்தம் செய்ய நேரம் ஒதுக்கி தர வேண்டும். மழைக் காலத்தில் அப்பொழுது தான் தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ள முடியும்.
கோவில் நகைகளை உருக்கி வங்கியில் டெபாசிட் செய்த கணக்கில் எந்த விதமான வெளிப்படை தன்மையும் இல்லை. தமிழ்நாட்டில் எத்தனையோ சாமானிய மக்கள் கேள்வி கேட்டும் கூட உருக்கப்பட்ட நகை எங்கே இருக்கிறது? அதன் மூலமாக எவ்வளவு வருமானம் வந்து இருக்கிறது, அதை என்ன செய்து இருக்கிறார்கள் என்பதற்கான பதில் கிடையாது. ஒவ்வொரு கோவிலிலும் ஆகம விதிகள் மீறப்படுகிறது” என கூறினார்.