நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் இடைக்கால ஜாமின் கேட்டு தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
சென்னை, மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக ‘மயிலாப்பூர் ஹிந்து பெர்மனன்ட் ஃபண்ட்’ எனும் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தின் தலைவராக இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தனியார் தொலைக்காட்சி நிறுவனருமான தேவநாதன் யாதவ் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்த நிதி நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிகளவில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிதி நிறுவனம் முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி அளிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்த வண்ணம் இருந்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி திருச்சியில் தேவநாதன் யாதவை கைது செய்தனர். இந்த வழக்கில் நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ், உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி மூன்றாவது முறையாக தேவநாதன் யாதவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேவநாதன் யாதவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நேற்று செவ்வாய்க்கிழமை (02-09-2025) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேவநாதன் தரப்பில், நீதிமன்ற உத்தரவின் படி 76 சொத்துப்பட்டியல் விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், தனக்கு சென்னை, திருவள்ளுர் உள்பட பல்வேறு இடங்களில் 136 ஏக்கரில் சுமார் 440 கோடி ரூபாய் சந்தை மதிப்பிலான சொத்துக்கள் உள்ள நிலையில், சொத்து மதிப்பை 30 கோடியாக குறைத்து காட்டி, ஓராண்டிற்கு மேல் சிறையில் உள்ள தன்னை தொடர்ந்து சிறையில் வைக்க அரசு முயற்சித்து வருவதாக குற்றம் தேவநாதன் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வாதாடுகையில், தேவநாதன் யாதவ் தாக்கல் செய்த பெரும்பாலான சொத்துக்கள் வில்லங்க சொத்துக்கள் மற்றும் 3வது நபர்களின் பெயரில் இருக்கும் சொத்துக்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் இந்த சொத்துக்களை வைத்து நிவராணம் கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதங்களை கேட்ட நீதி, தேவநாதன் யாதவ் ஓராண்டுக்கு மேல் சிறையில் இருக்கும் போது நடத்தப்பட்ட விசாரணையால் எந்த பயனும் ஏற்படவில்லை என அதிருப்தி தெரிவித்தார். மேலும், வழக்கை விசாரிக்கும் பொருளாதார குற்றப்பிரிவின் விசாரணையில் எந்த வித முன்னேற்றமும் இல்லை என தெரிவித்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதிக் குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.