சொத்துக் குவிப்பு வழக்கில், சென்னை ஊழல் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து அமைச்சர் துரைமுருகனுக்கு விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-11ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் துரைமுருகன், வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்துக்கள் சேர்த்ததாக 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி, எதிராக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கிலிருந்து இருவரையும் விடுவித்து, வேலூர் சிறப்பு நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த வேலூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரித்து, ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என, விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை சென்னை ஊழல் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கடந்த 2024ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில், இந்த வழக்கின் விசாரணையை வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி, அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்தது. வழக்கை வேலூருக்கு மாற்ற மறுத்ததை எதிர்த்து, துரைமுருகன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, துரைமுருகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், 2017ஆம் ஆண்டு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், 2019ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் வழக்கை சென்னைக்கு மாற்றியது குறித்து கேள்வி எழுப்பினார்.
மேலும் துரைமுருகனுக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, மனுவுக்கு செப்டம்பர் 22ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோருக்கு விளக்கு அளித்து உத்தரவிட்ட நீதிபதி, இந்த மனு மீதான விசாரணையை தள்ளி வைத்தார்.