தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை காவல்துறை தாக்கியது தொடர்பாக விசாரணை நடத்த ஒரு நபர் ஆணையம் அமைத்து பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் சென்னை மாநகராட்சியில் ராயப்பேட்டை மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில், தனியார் நிறுவனத்தின் வாயிலாக, திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில், ஈடுபட்டனர்.
தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்கு, அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட், உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். மேலும், இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வழக்கறிஞர்களும் போராட்டத்தில் குதித்தனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் நள்ளிரவில் காவல் துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதாக கூறி அவர்களை விடுவிக்க கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்து.
இந்த வழக்கு விசாரணையின் போது, தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட வழக்கறிஞர்களை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாகவும், பெண் வழக்கறிஞர்களிடம் காவல்துறை அத்துமீறி நடந்து கொண்டதாகவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது, கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை காவல்துறை தாக்கியது தொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்திபன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் நியமித்து, நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ், வி.லட்சுமி நாராணன் அமர்வு, உத்தரவிட்டது.
ஒரு நபர் ஆணையம் அமைத்து பிறப்பித்த உத்தரவை நீக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் மற்றும் பெரியமேடு காவல் ஆய்வாளர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு மற்றும் சௌந்தர் அடங்கி அமர்வு, ஒரு நபர் ஆணையம் அமைத்து பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. பிரதான வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளது.