Thursday, September 11, 2025
Homeதமிழ்நாடுதூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் விவகாரம் - நீதிமன்றம் புதிய உத்தரவு

தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் விவகாரம் – நீதிமன்றம் புதிய உத்தரவு

தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் விவகாரம் தொடர்பாக இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்கப் போவதில்லை என கூறிய நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.

சென்னை மாநகராட்சியில், இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சுரேந்தர், தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டார்.

அதேசமயம், தூய்மை பணியாளர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தை வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், தூய்மைப் பணிகள் தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொழிலாளர் நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவின் அடிப்படையில், தொழிலாளர் நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடியும் வரை, தற்காலிகமாக, தூய்மை பணியாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 761 ரூபாய் ஊதியத்தை தொடர்ந்து வழங்குவதற்கு, ஒப்பந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

ஒப்பந்த நிறுவனம் தரப்பில், தனி நீதிபதி உத்தரவுக்குப் பிறகு 800 பணியாளர்கள் பணியில் சேர்ந்த நிலையில், மேல் முறையீடு செய்ததை அடுத்து, அவர்கள் பணிக்கு வர மறுக்கின்றனர். இதனால் 2000 டன் குப்பைகள் தேங்கி, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இனியும் அவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் வேறு ஆட்களை நியமிக்க வேண்டி வரும். அதனால் தூய்மை பணியாளர்களை பணிக்கு திரும்ப அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்கப் போவதில்லை என கூறி, மனுவுக்கு அக்டோபர் 6ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி சென்னை மாநகராட்சிக்கும், ஒப்பந்த நிறுவனத்திற்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments