அரசு பள்ளியில் பள்ளி சிறுவர்கள் தலைமை ஆசிரியையின் கை கால்களை அமுக்கி விட்டு வீடியோ வைரலான நிலையில், ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாவேரிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பள்ளியில் சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
சம்பத்தன்று அப்பள்ளியின் தலைமை ஆசிரியை கலைவாணி, வகுப்பு நேரத்தில் மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய மேசையின் மீது படுத்து கொண்டு பள்ளி சிறுவர்களை கட்டாயப்படுத்தி கை கால்களை அமுக்கி விட செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், தலைமை ஆசிரியை கலைவாணி இது போன்ற செயல்களில் மாணவ மாணவிகளை தினமும் ஈடுபடுத்தியதாகவும், இதுகுறித்து பெற்றோரிடம் கூறகூடாது என அச்சிறுவர்களை மிரட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து தகவலறிந்த அரூர் மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் தலைமையிலான குழுவினர் பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, மாணவர்களின் பெற்றோர்களும் விசாரணைக்கு வந்திருந்தனர். அவர்கள் அதிகாரிகளிடம் தலைமை ஆசிரியையின் மீது புகார் தெரிவித்ததோடு, ஆசிரியை கலைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் தலைமை ஆசிரியை கலைவாணியை அப்பியம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்து மாவட்ட பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால் பணியிடை நீக்கம் செய்யாமல் பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஏற்கனவே மாணவர்களை இது போன்ற செயல்களில், ஆசிரியர்கள் ஈடுபடுத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதனையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் இதர வேலைகள் செய்வதாக வெளியான வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.