ஆடு, அடுப்பு, பாத்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் குறிப்பிட்ட பிரிவு மக்கள், தங்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை திரும்பப் பெறக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ளது பூதகுடி கிராமம். இங்கு முத்தரையர் சமூகத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் பூதகுடி கிராமத்தில் உள்ள கோயில் திருவிழாவில் மைக் செட் கட்டுவதில் இரு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக முத்தரையர் சமூகத்தை சேர்ந்த 8 இளைஞர்கள் மீது நத்தம் காவல் துறையினர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால், தங்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்ததாகக் கூறியதோடு, காவல்துறையை கண்டித்து போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி, தங்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஆண்கள் பெண்கள் பள்ளி மாணவ மாணவிகள் உட்பட 300க்கும் மேற்பட்ட முத்தரையர் சமுதாயத்தினர் சமூகத்தை சேர்ந்தவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்தரையர் சமுதாய மக்கள் ஆடு, அடுப்பு, சமையல் பாத்திரங்கள், பீரோ, குளிர்சாதன பெட்டி ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர் .தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாடிக்கொம்பு போலீசார் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட வந்த பொதுமக்களை நுழைவாயிலையே தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து அங்கேயே பொதுமக்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தங்களுக்கு பூதக்குடி கிராமத்தில் பாதுகாப்பு இல்லை என்றும், வசிப்பதற்கு சாதகமான சூழ்நிலை இல்லை என்றும், ஆகவே வாழ்வு இடம் தேடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.