அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி கார் உற்பத்தி ஆலையில் வேலை செய்த வெளிநாட்டினர் 475 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல், அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினரை சொந்த நாடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் முழு வீச்சாக ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அத்தோடு அவர்கள் நாடு கடத்தப்படும் நடவடிக்கையும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், ஜார்ஜியா மாகாணத்தில் தென்கொரிய நிறுவனம் ஒன்றின் கார் உற்பத்தி ஆலையில் வேலை செய்து வந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்ஜியா மாகாணத்தில் தென்கொரிய நிறுவனமான ஹூண்டாய் கார் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு மின்சார கார்களுக்கான பேட்டரி உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு சட்ட விரோதமாக தங்கி பலர் வேலை செய்து வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் கார் உற்பத்தி ஆலையில் நேற்று பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், சுற்றுலா விசாவில் சட்டவிரோதமாக இந்த கார் உற்பத்தி ஆலையில் சுமார் 475 பேர் வேலை பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் 300-க்கும் மேற்பட்டோ தென்கொரிய நாட்டை சேர்ந்தவர்கள்.
இவர்கள் அனைவரையும் அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் 350 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய தென்கொரியா திட்டமிட்டுள்ள நிலையில், இந்த கைது நடவடிக்கை இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.