சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர், சீன அதிபர் மற்றும் ரஷ்ய அதிபர் ஆகியோர் சந்தித்துக் கொண்ட நிகழ்ச்சி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர், ரஷ்யா-உக்ரைன் போர், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணையை கொள்முதல் செய்யும் விவகாரம், இந்திய பொருட்கள் மீதான அமெரிக்க அதிபரின் 50% வரிவிதிப்பு உள்ளிட்ட சிக்கலான சர்வதேச விவகாரங்கள் மத்தியில், ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு தொடங்கியது.
இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு சீனாவின் தியாஞின் நகரில் நடந்தது.
வரிவிதிப்பு முறை அமல்படுத்தினாலும் ரஷ்யாவுடன் நல்லுறவு தொடரும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில் இந்த சந்திப்பு சீனாவில் நடைபெற்று வருகிறது.
சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். இரண்டாவது நாளான இன்று ரஷ்ய அதிபர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்திய மற்றும் ரஷ்ய தலைவர்கள் முதல் முறையாக இன்று சீனாவில் சந்தித்து ஆலோசித்து வருகின்றனர். முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபரில் ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் இருவரும் சந்தித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற ரஷ்ய அதிபருடன் மேற்கொண்ட இருதரப்பு ஆலோசனைக் கூட்டத்தில் ரஷ்யாவுக்கு இந்தியா அதிகளவிலான பொருட்களை ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தியா அதன் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அதிகளவு ஏற்றுமதி செய்யக்கூடிய நாடுகளின் பட்டியல் ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ள நிலையில் இரு தலைவர்களின் சந்திப்பு கூடுதல் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
மேலும், இந்த உச்சிமாநாட்டில் உரை நிகழ்த்திய சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்காவை மறைமுகமாக விமர்சித்தார். அவர் தனது உரையில், “இரண்டாம் உலகப் போர் குறித்த சரியான வரலாற்றுக் கண்ணோட்டத்தை நாம் ஊக்குவிக்க வேண்டும். பனிப்போர் மனநிலை, பிராந்திய மோதல், மிரட்டல் நடைமுறை ஆகியவற்றை எதிர்க்க வேண்டும்” என வலியுறுத்தினார்.