கச்சத்தீவு இலங்கைக்குரியது என்றும் அதை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்று இலங்கை அதிபர் அநுரகுமார திஸாநாயக்க உறுதிபட தெரிவித்துள்ளார்.
இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு நேற்று திங்கட்கிழமை (01.09.2025) காலை வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மாலை கச்சதீவுக்கும் அவசர பயணம் மேற்கொண்டார். வடக்குக்கு இரண்டு நாள் பயணமாக சென்ற ஜனாதிபதி, மாலை 5 மணியளவில் ஊர்காவல் துறையில் இருந்து கடற்படையினரின் 4 படகுகளில் கச்சத்தீவுக்கும் பயணமானார்.
கச்சதீவைப் பார்வையிட்ட ஜனாதிபதி மாலை 6 மணிக்கு மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி பயணத்தை தொடங்கினார். யாழ்ப்பாணத்தில் நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, “கச்சதீவு இலங்கைக்குரியது. அதை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது” என்று வலியுறுத்திக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக மாநாட்டின் போது, கச்சத்தீவை மீட்போம் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இவ்வாறிருக்க, ஜனாதிபதி அநுரகுமார கச்சதீவுக்குப் பயணம் செய்த விஷயம் அரசியல் ரீதியில் பெரிதும் பார்க்கப்படுகின்றது.