புதுச்சேரியில் விதிமுறைகளை மீறி செயல்படும் செல்லப்பிராணி கடைகள்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
Sakthibhavaniselvaraj
· 1 min read

புதுச்சேரியில் உரிய அனுமதி மற்றும் பதிவின்றி செயல்படும் செல்லப்பிராணி விற்பனைக் கடைகள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. பல கடைகள் அரசு விதிமுறைகளைப் பின்பற்றாமல் நாய்கள், பறவைகள் உள்ளிட்ட விலங்குகளை விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
விலங்குகள் நலன் கருதி மத்திய அரசு கொண்டுவந்த 2018ஆம் ஆண்டு செல்லப்பிராணி கடைகள் விதிகளின்படி, விலங்குகளை விற்பனை செய்யும் கடைகள் மாநில விலங்குகள் நல வாரியத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இந்தப் பதிவுச் சான்றிதழ் இல்லாமல் கடைகளை நடத்த அனுமதி கிடையாது.
ஓழுகரேட் நகராட்சி எல்லைக்குள் நான்கு செல்லப்பிராணி கடைகள் மட்டுமே உரிய உரிமம் பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி நகராட்சிப் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் வர்த்தக உரிமம் மட்டும் வைத்துக்கொண்டு, விலங்குகள் விற்பனையில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.
மேலும், மரபணு குறைபாடுகளுடன் பிறந்த நாய்கள், பார்வையற்ற நாய்கள் உள்ளிட்டவை அரசு கால்நடை மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செல்லப்பிராணிகளுக்கு போதிய இடவசதி, சுத்தமான குடிநீர், உணவு, காற்றோட்டம் மற்றும் மருத்துவப் பராமரிப்பு வழங்க வேண்டும். விதிகளை மீறி செயல்படும் கடைகள் மற்றும் நாய் இனப்பெருக்க மையங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஓழுகரேட் நகராட்சி எச்சரித்துள்ளது.




